ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் விடயங்களில், அரசு தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பல சுற்றுப் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும்.
இதன் மூலமே ஆரோக்கியமானதோர் சூழல் ஏற்படுமென்று, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனி, அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதென்று, முன்னணியின் நிதிச் செயலாளர் இரா. சலோபராஜா குறிப்பிட்டார்.
பதுளைப் பகுதியின் மாப்பாகலை பெருந்தோட்டப் பிரிவின் வெலிபிஸ்ஸ சனசமூக நிலையத்தில் இன்று நடைபெற்ற பெருந்தோட்டப்பகுதி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச் செயலாளர் இரா. சலோபராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்,
‘ஊழியர் சேமலாப நிதியிலிருந்து அரசு 65 பில்லியன் ரூபா நிதியினை வரியாக பெறவுள்ளமை அறிந்து, ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவோர் பெரும் அதிர்ச்சி கொண்டுள்ளனர். அரசு இது விடயத்தில் தமது முடிவை மாற்றிக் கொள்ளல் வேண்டும். தவறின் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடாத்த வேண்டிய நிலை உருவாகும்.
ஊழியர் சேமலாப நிதியில் 25 வீதப் பகுதியை வரியாக அரசு கையகப்படுத்தவுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இத் தகவல்கள், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் செலுத்துவோருக்கு பேரதிச்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
விசேடமாக பெருந்தோட்டங்களை மையப்படுத்தி தொழில் புரியும் எமது மக்கள், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் மீது அதிக எதிர்ப்பார்ப்புக்களுடன், இருந்து வருகின்றனர். இவ் எதிர்ப்பார்ப்புக்கள் இடம்பெறாவிட்டால், அவர்கள் பாரிய பின் விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
அம் மக்களைப் பொறுத்தவரையில், தங்கள் வியர்வையை சிந்தி மேற்கொள்ளும் கடின உழைப்பின் ஒரு பகுதியை ஊழியர் சேமலாப நிதிக்கு வழங்குகின்றனர். தமது ஓய்வுநிலை வயதினை அடைந்ததும், தத்தமது ஜீவனோபாயங்களை கொண்டு செல்ல, இந் நிதியே, அம்மக்களுக்கு கைகொடுக்கின்றது.
அவர்களுக்கென்று வேறு எந்தவொரு வருமானங்களும் கிடையாது. விவசாயம் செய்ய காணியோ அல்லது வேறு ஏதாவது ஒரு தொழில் துறையினை மேற்கொள்ளவோ, அவர்களுக்கு எத்தகைய வாய்ப்புக்களும் இல்லாதுள்ளன. ஓய்வு பெற்றப் பின் கூலித் தொழில்களில் ஈடுபடுவதற்கும், அவர்களினால் முடியாதுள்ளன.
மேலும் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமின்றி, உழைக்கும் அனைத்து தரப்பினருக்கும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் விடயங்களில் அரசு முன்வைத்துள்ள முடிவுகள் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன.
ஊழியர் சேமலாப நிதியில் 25 வீதம் என்பது பெருந்தொகையாகும். இப்பணத்தைக் கொண்டு, கிராம சேவைப் பிரிவுகளில் தலா 30 இலட்ச ரூபா என்ற வகையில் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவு செய்யப்படவிருப்பதாகவும் அறிய முடிகின்றது.
அத்துடன் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியில் வருட இறுதியில் வட்டியாக வரவிடப்படும் தொகையில் ஐந்து வீதம் முதல் எட்டு வீதம் வரையிலான பணத்தை, இவ் நிதியங்களில் இருந்து கையகப்படுத்த அரசு முயற்சிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இது விடயத்தில் தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவிற்கு உடன்பாடுகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது. எமது நாட்டின் பிரதமராக இருந்த அமரர் எஸ்.டபள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் காலத்திலேயே அவரது எண்ணக் கருத்துக்கமைய, ஊழியர் சேமலாப நிதி திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அக்காலப் பகுதியில் தொழிலாளர் சமூகத்தினர் இத்திட்டம் குறித்து சிரத்தை காட்டாமல் இருந்து வந்தனர். காலப் போக்கில் ஊழியர் சேமலாப நிதித் திட்டத்தினை, தொழிலாளர் சமூகத்தினர் முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதன் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். இத்திட்டத்தின் பெறுமதியை பெருந்தோட்ட மக்கள் தற்போது பூரணமாக அறிந்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு நன்மைகளையும், பயன்களையும் பெற்று வருகின்றனர். வீட்டுக்கடன், குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்வதோடு, ஊழியர் சேமலாப நிதியின்; மொத்த தொகையில் 30 வீதம் என்ற வகையில் வட்டி இல்லாமல் பெற்றுக்கொள்வதுடன், ஏனைய கடன்களையும் பெற்று, வாழ்வாதார மேம்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், வீடுகளுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள், நாகரீகப் பொருட்கள், கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, வாகனங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதுடன், தமது பெற்றோரின் ஊழியர் சேமலாப நிதி மூலம், அவர்களின் பிள்ளைகளும் தமது மேற் படிப்புக்காக பெரும் பயன்களை அடைந்த வண்ணமுள்ளனர். குறிப்பாக இந்நிதி மூலமே, பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக்தினர், ஏனைய சமூகத்தினருக்கு நிகராக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறலாம்.
இந்நிலையில், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் மீது அரசு கை வைப்பதானது, பாரிய பாதிப்புக்களை பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். தற்போதைய நிலையிலேயே, அம்மக்கள் எமது பணத்திற்கு என்ன நடக்குமோ என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நிலைக்கு தள்ளப்பட்டள்ளனர்.
ஆரம்பக் காலக்கட்டத்தில் தொழில் தருனர்கள் நூற்றுக்கு ஐந்து வீதமும் தொழில் செய்வோர் மூன்று வீதமும், ஊழியர் சேமலாப நிதிக்கு செலுத்தும் முறைமை சட்டமாக்கப்பட்டது. தற்போதைய நிலையில் தொழில் தருனர்கள் நூற்றுக்கு பன்னிரண்டு வீதமும், தொழில் செய்வோர் எட்டு வீதமும் என்றடிப்படையில் ஊழியர் சேமலாப நிதிக்கு செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ” -என்றார்.
எம்.செல்வராஜா, பதுளை










