ஹாலி எல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளன் – எல்பின் தோட்டத்தின் கிளன்- எல்பின் பிரிவில் உள்ள 24 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் நேற்று (10) ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக 02 லயன் குடியிருப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ பரவலின் போது குறித்த இரு குடியிருப்புகளிலும் இருந்த சொத்துகளும் பல முக்கிய ஆவணங்களும் தீக்கியாகியுள்ளன.
ஒரு லயன் குடியிருப்பொன்றில் மூதாட்டியும் அவரது பேத்தியும் வசித்து வந்துள்ளதோடு, அடுத்த லயன் குடியிருப்பில் தோட்டத் தொழிலாளி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். தீ பரவல் ஏற்பட்ட சந்தர்பத்தில் குடியிருப்புகளில் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
தீப் பரவலை தோட்ட மக்கள் விரைந்து செயற்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஹாலி எல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க ஹாலி எல பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மைக் காலமாக பதுளை மாவட்டத்தில் லயன் குடியிருப்புகளில் தீப் பரவல் ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










