எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்து அமுல்படுத்தும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மையும் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை மற்றும் விநியோகத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகத்தை சீராக முகாமைத்துவம் செய்வதற்கு இந்த QR முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அவர் கூறினார்.
இருப்பினும், QR முறை அமுல்படுத்தப்பட்டு எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்ட போதிலும், எரிபொருள் நுகர்வு மிதமான அளவிலேயே குறைந்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார். இதன்படி, டீசல் நுகர்வு சுமார் 10 சதவீதமும், பெட்ரோல் நுகர்வு சுமார் 9 சதவீதமும் மட்டுமே குறைந்துள்ளது.
மேலும், அத்தியாவசியத் துறைகளுக்குத் தேவையான எரிபொருள் தொடர்ந்து தடையின்றி விநியோகிக்கப்படும் என்றும், உலகளாவிய எரிபொருள் சூழல் சீரடையும் வரை இந்த QR விநியோக முறை மேலும் சிறிது காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.










