நவீனமயப்படுத்தப்பட் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை எச்சில் துப்பிய மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 1,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நூதனை முறையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அசுத்தப்படுத்திய இடங்களை, அவர்களே சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களில் பல பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கவும், பேருந்து நிலைய வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 64 கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன.
படைப்பிரிவுத் தலைவர் இந்திக விக்கிரமசிங்க தலைமையிலான 25 விமானப்படை வீரர்கள் கொண்ட குழு, நாளொன்றுக்கு 88 முறை இந்த கண்காணிப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்த கண்காணிப்பு அமைப்பின் மூலம் 1,286 சட்டவிரோத சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெறப்பட்ட கேமரா பதிவுகளின் அடிப்படையில், திருட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 64 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.










