அரசாங்கம் அண்மையில் அறிமுகப்படுத்திய வரித் திருத்தம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) அச்சுறுத்தியுள்ளது.
பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் புதன்கிழமை முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த போதிலும், FUTA தனது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்கிறது.
FUTA இன் உறுப்பினர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்து விலகிக் கொண்டிருப்பதோடு, க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குறியிடலை நிறைவு செய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்துடன் ஈடுபடுவதையும் தவிர்த்து வருகின்றனர்.
FUTA தலைவர் பேராசிரியர் ஷ்யாமா பன்னெஹெகா, தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் தங்கள் கவலைகளை அறிவிப்பதாக தெரிவித்தார்.
கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராசிரியர் ஷ்யாமா பன்னெஹேகா குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக ஆறு மாதங்கள் காத்திருக்கத் தயாராக இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி மார்ச் 22 வரை காத்திருக்க முடியாது என்பதால் FUTA உடனடியாக ஒரு கூட்டத்தைக் கோரும் என்றும் பேராசிரியர் ஷ்யாமா பன்னெஹேகா கூறினார்.