நெருக்கடியான சூழலிலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் (23) திங்கட்கிழமை தொடக்கம் ஜூன் (01) வரை நடைபெறுகிறது. இதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும்தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
ஆணையாளர் இதுதொடர்பாக அரசாங்கதகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடத்திய கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார்.
மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.இங்கு அவர் தெரிவித்ததாவது,
பாடசாலை விண்ணப்பதாரிகள் 4,07,129 பேரும் 1,10,367 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் உள்ளடங்கலாக மொத்தம் 5,17,496 விண்ணப்பதாரிகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதற்கென 3,844 பரீட்சை நிலையங்கள் மற்றும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்குத் தேவையான கடதாசி உள்ளிட்ட எனைய பொருட்கள் தற்போது பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.பரீட்சை வினாத்தாள்கள் எதிர்வரும் நாட்களில் அனுப்பிவைக்கப்படும். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு பாடசாலையில் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் தாமதமானால், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். பரீட்சைக்காக
மேற்கொள்ளப்படும் விரிவுரைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் இன்று (20) நள்ளிரவு 12 மணியுடன் நிறுத்தப்படவேண்டும்.
பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் மற்றும் அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரம் கிடைத்தவுடன் அதனைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். திருத்தப்பட வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்தின் மூலம் திருத்தியமைத்துக் கொள்ளல் வேண்டும். பின்னர் திருத்தப்பட்ட பிரதி அச்சிடப்பட்டு,அதனை அனுமதிப்பத்திரத்துடன் இணைத்து பரீட்சை மண்டபத்தில் பிரதான பொறுப்பதிகாரியிடம் சமர்ப்பித்து பரீட்சையில் தோற்றமுடியும்.
கொவிட் 19 பெருந்தொற்று இன்னும் நிலவுகின்ற மையால்,பரீட்சை நிலையங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும். கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிக்கு பரீட்சை நிலையத்தில் விஷே ஏற்பாடு செய்யப்படும்.
விஷேடதேவையுடைய மாணவர்கள் 590 பேர் இம்முறை விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.