எம்சிசி உடன்படிக்கை குறித்து மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டைகு கருத்தை முன்வைப்பதற்கு அமைச்சர்களுக்கு ஜனாதிபதியால் மேலும் இரு வாரங்கள் அவகாலசம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (09) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தகவலை வெளியிட்டார்.
எம்சிசி மீளாய்வுக்குழுவின் அறிக்கை தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் (08.07.2020) அமைச்சர்கள் தமது கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் பந்துல குணவர்தன கடந்தவாரம் 2 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இதன்படி நேற்று முன்தினம் (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டனவா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர்,
” எம்சிசி உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான எனது நிலைப்பாட்டை அமைச்சரவையின் செயலாளருக்கு வழங்கியுள்ளேன். இது தொடர்பில் மேலும் ஆராயவேண்டியுள்ளது என அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். இதன்படி இருவாரங்கள் அவகாசம் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.
எதுஎப்படியிருந்தாலும் நாட்டின் அரசியலமைப்பைமீறும் வகையில், தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவே இருக்கின்றது.” – என்றார்.