ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்: போக்குவரத்து முடங்கி மக்கள் அவதி

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஹட்டன் பகுதியில் உள்ள விக்டன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி சேதமடைந்துள்ளது.

ஹட்டனில் இருந்து ருவன்புர ஊடாக விக்டன் தோட்டத்திற்குச் செல்லும் வீதியில், சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிமெந்து பாலத்தின் ஒரு பகுதி சீரற்ற வானிலையால் உடைந்து சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் சேதமடைந்த பாலத்தின் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் விக்டன் தோட்டம் மற்றும் அதன் 5 பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

விக்டன் தோட்டப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அருகிலுள்ள பிரதான நகரமாக ஹட்டன் விளங்குவதுடன், தினமும் சுமார் 6 தனியார் பேருந்துகள் இவ்வீதியினூடாகச் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சிமெந்து பாலம் ஏற்கனவே பலமுறை சேதமடைந்தபோது, தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தற்காலிகமாகச் சீரமைத்துப் பேருந்து போக்குவரத்தைச் சீர்செய்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், தற்போது பாலத்தின் ஒரு பகுதியில் பாரியளவு உடைவு ஏற்பட்டுள்ளதால், தங்களால் தற்காலிகமாகக்கூடச் சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

பேருந்து சேவை பாதியிலேயே நிறுத்தப்படுவதால், விக்டன் தோட்டப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் மருத்துவமனைக்குச் செல்வதிலும் பெரும் பாதகம் ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி, தோட்டத்தில் இருந்து பாலம் சேதமடைந்த பகுதி வரை பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் அதிகளவில் கட்டணம் அறவிட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சேதமடைந்த பாலத்தை உடனடியாகப் புனரமைப்பதுடன், எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நிலையான புதிய பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு விக்டன் தோட்ட மக்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், பிரதி அமைச்சர், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles