” நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது. வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருந்த இடப்பற்றாக்குறையும் தற்போது இல்லை. எனவே, இந்நிலைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் இனிவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையும்.” – என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே கடந்தகாலங்களில் கூடுதல் தொற்றாளர்கள் பதிவானார்கள். அப்பகுதிகளிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அதேபோல கடுமையான நோய் குறிகுறிகள் தென்படுபவர்களின் எண்ணிக்கையும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த இரு மாதங்களில் அதிகளவானோர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஒட்சீசன் வழங்க வேண்டியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து சென்றது. தற்போது இந்நிலைமை இல்லை. கொரோனா தொற்றாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டில்களில் இடம் உள்ளது. ஒட்சீசன் உள்ளடங்களான கட்டில் வசதியும் உள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த பெறுபேறு கிட்டியது. எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையக்கூடும்.
இந்நிலைமையை தக்கவைத்து, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். அதேபோல இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்கள்கூட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.” – என்றார்.