“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’
இவ்வாறு ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதைத் தொடர்ந்து, ஈரான்மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்காகவே அமெரிக்கா இந்த நகர்வை கையாள்கின்றது எனக் கூறப்படுகின்றது.
இந்தச் சூழலில், அயத்துல்லா அலிகமேனி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகையில், அமெரிக்கா ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள்; போரைத் தொடங்கினால், அது இம்முறை ஒரு பிராந்தியப் போராக மாறும்.
நாங்கள் யாரையும் முதலில் தாக்கமாட்டோம். ஆனால், எங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அல்லது தொந்தரவு கொடுத்தால், அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்.” – எனக் கூறினார்.
ஈரானில் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் தொடங்கிய போராட்டங்களை ‘ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதி நடவடிக்கை’ என்று கமேனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டுச் சக்திகள் ஈரானின் முக்கிய நிர்வாக அமைப்புகளைச் சிதைக்க முயன்றதாகவும், அந்த முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரானின் ‘புரட்சிகர காவல் படையை’ பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. இதற்கு பதிலடியாக, ஐரோப்பிய நாடுகளின் அனைத்து ராணுவப் படைகளையும் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது.
