இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன், ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார்.
இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி மற்றும் கூடுதல் வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா.
இந்நிலையில், தற்போது பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.
“பிரதமர் நரேந்திர மோடி உடன் மேற்கொண்ட உரையாடலை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது அருமை நண்பர்களில் அவர் ஒருவர். வலிமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர்.
வர்த்தகம், ரஷ்யா – உக்ரைன் போர் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.” – என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
