சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது கொண்டுள்ள தீவிர ரசிகர் பற்றை வெளிப்படுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியின் சக வீரர்களுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக முழுத் திரையரங்கையும் முன்பதிவு செய்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சஞ்சு சாம்சனும் இத்திரைப்படத்தைத் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளார்.
ரஜினிகாந்தின் திரைப்படங்களைப் பார்ப்பதில் தமக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்துள்ள சஞ்சு சாம்சன், அவரது அடுத்த திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு முறையும் அதனைப் பார்ப்பதற்குக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக NDTV ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கையில்,
“ரஜினி சாரின் திரைப்படங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது அடுத்த திரைப்படத்துக்காக எப்போதும் காத்திருப்பேன். இந்த முறை ஒரு நாள் தாமதமாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், திரைப்படத்தை வெளியான நாளில் பார்க்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திரைப்படத்தைப் பார்ப்பதற்காக முழுத் திரையரங்கையும் முன்பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனது நண்பர்கள் மற்றும் மனைவியையும் அழைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
“அதிர்ஷ்டவசமாக இன்று முழுத் திரையரங்கையும் முன்பதிவு செய்ய முடிந்தது. எனது நண்பர்களையும் அழைத்துள்ளேன். எனது மனைவியும் இங்கிருக்கிறார். ரஜினி சாரின் திரைப்படத்தைப் பெரிய திரையில் பார்ப்பதற்கு மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன். அணியிலும் உதவிப் பணியாளர்கள் குழுவிலும் தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய அனைவரும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வருவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
