இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி – சுனாமி எச்சரிக்கை நீக்கம்! இலங்கைக்கு ஆபத்து இல்லை

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகின. இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

உயிரிழந்த இருவரைத் தவிர, சிக்கா (Sikka) பிராந்தியத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை முகமையான BNPB தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கட்டிடங்கள் சேதம் 0 பொதுமக்கள் அலறல்

புளோரஸ் (Flores) தீவில் உள்ள சிக்கா பிராந்தியத்தின் முக்கிய நகரமான மாவுமேரே (Maumere) துறைமுகத்தில், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டமானதை அடுத்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடும் வீடியோ பேஸ்புக்கில் வெளியானது.

கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு நுசா தெங்காரா மற்றும் தெற்கு சுலவேசியின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் வரை இந்த அதிர்வுகள் நீடித்ததாக பல பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக BNPB குறிப்பிட்டுள்ளது.

“பெரும்பாலான மக்கள் நில அதிர்வை உணர்ந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்” என்று பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள என்டே (Ende) மாவட்டத்தில் இருந்த மருத்துவமனை ஒன்றில், நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு திறந்தவெளியில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் ‘காம்பாஸ் டிவி’ (Kompas TV) ஒளிபரப்பில் காட்டப்பட்டன. மேலும், குறைந்தபட்சம் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக ‘Kompas.com’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

புவிப்பௌதிகவியல் முகமையான BMKG தகவலின்படி, முதல் நிலநடுக்கம் அதிகாலை 4:58 மணிக்கு (2158 GMT) 15 கி.மீ (9 மைல்) ஆழத்தில் மையங்கொண்டு பதிவானது. அதைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகள் பதிவாகின.

ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்து இல்லை

ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த கடலடி நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலிய பிரதான நிலப்பகுதிக்கும், அதன் தீவுகள் அல்லது பிற பகுதிகளுக்கும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கைக்கு நிலநடுக்க ஆபத்தில்லை

இதற்கிடையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தையடுத்து இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க நிலைமையினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles