அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மற்றும் முக்கிய மூலோபாயப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான முன்னேற்றங்கள் முற்றுப்புள்ளியை எட்டியுள்ளன.
இது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான தாக்குதல்களுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய மோதலை மேலும் நீட்டிக்கச் செய்யும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
“ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த பிராந்தியத்தில் பதற்றங்களை அதிகரிக்க ஈரானிய அமைப்புகள் ஆயத்தமாக இருக்க வேண்டும்; ஏனெனில் கடினமான முடிவுகளை எடுக்கவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஈரான் தயார் நிலையில் இருக்கும்,” என்று குறிப்பிட்ட அந்த ஈரானிய அதிகாரி, இராஜதந்திர முயற்சிகள் தோற்றால் அமெரிக்க கடற்படையின் முற்றுகையை உடைக்க ஈரான் “சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான” இராணுவத் தாக்குதலை நடத்தும் என்றும் கூடுதல் தகவலக அளித்தார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் திங்கள்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த ஒப்பந்தம் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் அமெரிக்க தடைகள் குறித்தான பரந்த உடன்பாட்டிற்கு 60 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்தது.
“அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருதல்” என்று பிரகடனப்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தம், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் குறுகிய நீர்நிலையான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த தகராறால் விரைவாகச் சீர்குலைந்தது.
ஜூன் மாத தற்காலிக ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா முயல்கிறதா என்று திங்கள்கிழமை செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லை என்று பதிலளித்தார்.
