ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
‘‘போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒன்று, ஈரானுக்கு உள்ள உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், இரண்டாவது, ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மூன்றாவது எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உறுதிமொழி வழங்க வேண்டும்.
அமைதியை ஏற்படுத்துவதில் ஈரான் உறுதியாக உள்ளது. என்றபோதிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த மோதல் முடிவுக்கு வரும். ஏனெனில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் காரணமாகவே இந்த போர் தொடங்கியது.
ஈரானின் பாதுகாப்புக்கு வலுவான சர்வதேச உத்தரவாதங்கள் கிடைத்தால் மட்டுமே போர் முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அக்சியாஸ் ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்தப் பேட்டியில், “ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஏனெனில், ஈரானில் அமெரிக்க ராணுவம் குறிவைத்து குண்டுவீசி அழிப்பதற்கு என்று எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். போர் முடிவுக்கு வரும்.
இந்தப் போர் இதுவரை சிறப்பாக நடந்துள்ளது. விளைவுகள் திட்டமிட்டதைவிட அதிகமாக உள்ளது. நாங்கள் 6 வார காலத்தில் எந்த அளவிலான அழிவை ஏற்படுத்த நினைத்தோமோ அதைவிட அதிகமாகவே நிகழ்த்திவிட்டோம்” என்று கூறி இருந்தார்.










