யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி , தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார்.
அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட மருந்துகளை உடனடியாகப் பொருத்தமான இடத்துக்கு மாற்றியமை மற்றும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து அவர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பணிப்பாளர், மருத்துவமனையின் உள்ளக மருந்துக் களஞ்சியத்திலிருந்தும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்தும் தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
இதன்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு ஆளுநர் நேரில் சென்று தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
‘பெரும் சேதத்தைத் தணிப்பதற்கு நீங்கள் எடுத்த இந்த வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது’ என அவர் தீயணைப்பு வீரர்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அத்துடன், இத்தீயைக் கட்டுப்படுத்தும் கூட்டு முயற்சியில் உடனடியாகச் செயற்பட்டுச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் தனது கௌரவத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் இணைந்து செயலாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஆளுநர் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.
இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த தீயணைப்பு வீரர்கள், படையினர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகள் மருத்துவமனையால் முன்னெடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதன்போது ஆளுநருக்கு உறுதியளித்தார்.
