லிந்துலை பகுதியில் மண்மேடு சரிந்து மூன்று வீடுகள் சேதம்

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு வீடுகள் எந்நேரமும் சரிந்து விழக்கூடிய அபாய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

சுமார் 40 அடி உயரத்தில் அமைந்திருந்த மண்மேடு, அதிகாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென வீடுகளின் பின்புறமாக சரிந்து விழுந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் மண்சரிவினால் வீடுகளின் பின்புற சுவர்கள் இடிந்து சேதமடைந்ததுடன், சில வீடுகளின் கூரைகளும் பகுதியளவில் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீடுகளில் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட பெரும் சத்தத்தைத் தொடர்ந்து வெளியேறியதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். சில நொடிகள் கூட தாமதமாகியிருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

வீடுகள் கடுமையாக சேதமடைந்திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவில்லை என்பது கவலைக்கிடமான விடயமாகும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அதே வீடுகளிலேயே சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளர்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்மேடு மேலும் சரிந்து விழக்கூடிய அபாயம் நீடித்து வருவதாகவும், ஒவ்வொரு மழை பெய்யும் தருணத்திலும் உயிரை பணயம் வைத்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அச்சம் காரணமாக பலரும் நிம்மதியாக உறங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், சம்பவம் இடம்பெற்று பல நாட்கள் கடந்தும் இதுவரை உரிய நிவாரண உதவிகளோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளோ வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். தங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகமும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.

மேலும், வீடுகளின் மீது சரிந்து கிடக்கும் மண்மேட்டை அவசரமாக அகற்றுவதோடு, அபாயத்தில் உள்ள குடும்பங்களை தற்காலிக பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றி, பின்னர் நிரந்தர தீர்வாக பாதுகாப்பான வீடுகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், அனர்த்த முகாமைத்துவ மையம், தலவாக்கலை பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து உடனடியாக நிலைமையை ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மேலதிக அனர்த்தங்களைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles