தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இன்று (04) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொழிலாளி கொழுந்து கொய்துகொண்டிருக்கையில் புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைப் பகுதியில் தாக்கியுள்ளது.
சிறுத்தையின் தாக்குதலால் அப்பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நானுஓயா நிருபர்










