பதுளை பகுதியில் ஆறு ஆண்டுகளாக மக்களுக்குச் சேராத கடிதங்கள்! தபால்காரரின் வீட்டில் 2,078 கடிதங்கள் மீட்பு!!

ஹல்தும்முல்லை, சொரகுணே உப தபால் அலுவலகத்தில் பணியாற்றும் 42 வயதுடைய தபால்காரர் ஒருவரின் வீட்டில், மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 2,078 கடிதங்களை ஹல்தும்முல்லை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கசிப்பு விற்பனையில் குறித்த தபால்காரர் ஈடுபடுவதாக ஹல்தும்முல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் இந்துனில் ரத்நாயக்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 20ஆம் திகதி பிற்பகல், ஹரங்காவ, சொரகுணே பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் சந்தேகநபரின் வீட்டை பொலிஸ் குழுவினர் திடீர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, வீட்டின் ஓர் அறையில் இருந்த படுக்கையின் மெத்தையை அகற்றிச் சோதனையிட்டபோது, பல்வேறு நபர்களின் பெயர்களைக் கொண்ட 2,078 கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,065 சாதாரண கடிதங்களும் 13 பதிவுத் தபால் கடிதங்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடிதங்கள் தொடர்பாக சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியபோது, ஹல்தும்முல்லை, சொரகுணே மற்றும் ஹரங்கஹவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக தபால் அலுவலகத்தினால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதங்களை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்தக் கடிதங்களை மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்ததுடன், அதன்மீதே உறங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கடிதங்களில் அரச நிறுவனங்களால் அனுப்பப்பட்ட முக்கியமான ஆவணங்கள், நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் அழைப்பாணைகள், வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்புக் கடிதங்கள், பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்கள் உள்ளிட்டவை உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (2) உதயகுமாரவின் ஆலோசனையின் பேரிலும், ஹல்தும்முல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துனில் ரத்நாயக்கவின் வழிநடத்தலிலும் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles