லங்கா பிரிமியர் லீக்கின் (LPL) உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கொடியின் முக்கிய சின்னமாகக் காணப்படும் சிங்கத்தின் தைரியம், உறுதி மற்றும் வீரம் ஆகியவை லங்கா பிரிமியர் லீக் (LPL) சின்னத்தின் மையப்பொருளாகும்.
LPL சின்னம் தேசத்தின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் , மக்களின் சுதந்திரம் மற்றும் இலங்கை வீரர்கள் ஆடுகளத்தில் இருக்கும் அவர்களின் அச்சமற்ற அணுகுமுறை ஆகியவற்றையே குறிக்கிறது.
இலச்சினையில் காணப்படும் சிவப்பு , செம்மஞ்சள் வண்ணங்கள் பயன்படுத்தப்படுவது, வரலாற்று புகழ் கொண்ட கண்டிய ஓவியங்கள் மற்றும் இலங்கை சிகிரிய ஓவியங்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதுடன் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டமை இலங்கை கிரிக்கெட்டின் வண்ணங்களை சித்தரிக்கின்றன.
சிங்கத்தின் மேனியில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் இதில் கலந்துகொள்ளும் ஐந்து அணிகளையே குறிக்கின்றன. சிங்கத்தின் கீழ் பக்கங்களில் காணப்படும் வண்ணங்கள் அளவின் உணர்வினையும் மற்றும் விளையாட்டின் வேகத்தையும் சித்தரிக்கின்றன.
அத்துடன் சிங்கத்தின் மேல் பகுதியில் காணப்படும் வண்ணங்கள் நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விளையாட்டாகக் காணப்படும் கிரிக்கெட்டின் மீது மக்கள் காட்டும் ஆர்வத்தைக் குறிக்கின்றது.
இந்த வண்ணங்களைப் இந்த இலச்சினைக்குப் பயன்படுத்துவதன் நோக்கம் இலங்கை இலச்சினையாக போட்டியை ஏற்பாடுசெய்வதே ஆகும். அத்துடன் இது உள்ளுர் மற்றும் சர்வதேசரீதியான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சமமாகும்.
எல்.பி.எல் இலச்சினையைப் பற்றி LPL பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் கூறுகையில்,
“LPL இலச்சினையானது இலங்கையிலுள்ள அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட்டுக்கும் மிகவும் தனித்துவமானது என்பதையே சித்தரிக்கிறது. இது நாட்டில் அனைவரின் மனதிலும் ஒருமுக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் இது உலகளாவிய வேண்டுகோளையும் கொண்டுள்ளதோடு, இது எமது சர்வதேச பார்வையாளர்களை LPL உடன் எளிதாக இணைக்கவும் உதவுகிறது.
அத்துடன் இது தேசத்தின் உணர்வையும் கைப்பற்றியுள்ளதுடன் இதைவிட சிறந்த எதையும் நாங்கள் கேட்டிருக்கமுடியாது.”என தெரிவித்தார்.
லங்கா பிரிமியர் லீக் 2020 நவம்பர் 21 முதல் டிசம்பர் 13 வரை கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஹம்பாந் தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேசகிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நடத்தப்படவுள்ளன.
இந்த போட்டித் தொடருக்கான கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.
லங்கா பிரிமியர் லீக்கில் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்து 15 அணிகள் 23 போட்டிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலுள்ள அனைத்து முன்னணி சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் 75 சர்வதேச வீரர்கள் இந்த போட்டியாளர் தேர்வில் இடம்பெறுவர்.