2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, தென் கொரிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதலாவது அணியாக நாக்கவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
வியாழக்கிழமை குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் அரங்கம் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதுமின்றி முடிவடைந்தது.
இதனால் அதிருப்தியடைந்த மெக்சிகோ ரசிகர்கள் இடைவேளையின் போது கூச்சலிட்டுத் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும், இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே (50-ஆவது நிமிடம்) மெக்சிகோ அணி கோல் அடித்து அசத்தியது. தென் கொரிய கோல்கீப்பர் கிம் சியுங்கியு (Kim Seunggyu), உயரமாக வந்த பந்தைப் பிடிக்க முயன்றபோது தனது சொந்த அணி வீரர் மீதே மோதி பந்தைக் கோட்டை விட்டார்.
அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மெக்சிகோவின் லூயிஸ் ரோமோ (Luis Romo), பந்தை எளிதாகக் கோலுக்குள் தள்ளி மெக்சிகோவை முன்னிலை பெறச் செய்தார்.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் தென் கொரிய அணி கோல் அடிக்க எடுத்த மிகக் கடுமையான இரண்டு முயற்சிகளை மெக்சிகோ கோல்கீப்பர் ரவுல் ரான்ஜெல் (Raul Rangel) மிக சாதுரியமாகத் தடுத்து நிறுத்தினார். இதனால் மெக்சிகோவின் வெற்றி இறுதிவரை தக்கவைக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ‘குரூப் ஏ’ (Group A) பிரிவில் மெக்சிகோ அணி முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு (Last 32) முன்னேறியுள்ளது.
இதன் மூலம் மெக்சிகோ தனது அடுத்த நாக்கவுட் போட்டியை மெக்சிகோ சிட்டியிலேயே விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இ பிரிவில் தென் கொரியா 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், செக்கியா மற்றும் தென்னாப்பிரிக்கா தலா 1 புள்ளியுடனும் அடுத்த கட்ட வாய்ப்பில் நீடிக்கின்றன.
வெற்றிக்குப் பிறகு பேசிய மெக்சிகோ தலைமைப் பயிற்சியாளர் ஜேவியர் அகுயிரே (Javier Aguirre):
“இது இரு அணிகளுமே ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்காமல் சமபலத்துடன் போராடிய ஒரு போட்டியாகும். தவறு செய்யும் அணி தோற்கும் என்ற நிலையில், அவர்கள் தவறு செய்தனர்.
ஆட்டத்தின் போக்கை மறந்துவிட்டு, இந்த வரலாற்று வெற்றியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் எங்கள் சொந்த மண்ணை (மெக்சிகோவை) விட்டு வெளியேறாமல் அடுத்த சுற்றில் விளையாடப் போவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
மெக்சிகோ அணி தனது அடுத்த கடைசி லீக் போட்டியில் செக்கியாவை எதிர்கொள்ளவுள்ளது.
தென் கொரியா தனது அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. முன்னதாக அன்று நடந்த செக்கியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என டிரா (Draw) ஆனது குறிப்பிடத்தக்கது.
