ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்திய எம்.பி. ஒருவர், தனது நீண்டகால காதலியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரைட் தொகுதியின் லிபரல் கட்சி எம்.பி.யான 32 வயதுடைய ஜோர்டன் லேன், கடந்த வியாழக்கிழமை (19) நாடாளுமன்றத்தில் தனது இறுதி உரையை நிகழ்த்தியபோது, பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த தனது காதலி நடாலியிடம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காதல் உறவைக் கொண்ட இருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்த இந்தச் சம்பவத்தின்போது, மோதிரத்தை எடுத்த ஜோர்டன் லேன், முழங்காலில் அமர்ந்து திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு நடாலி சம்மதம் தெரிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அத்துடன், நடாலி ‘ஆம்’ எனப் பதிலளித்ததை நாடாளுமன்றப் பதிவிலும் குறிப்பிடுமாறு அவர் நகைச்சுவையாகக் கேட்டுக்கொண்டார்.
2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்த ஜோர்டன் லேன், அரசியலில் இருந்து விலகும் தனது இறுதி உரையையே காதலுக்கான மறக்க முடியாத தருணமாக மாற்றியுள்ளார்.
