“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் எமது தலைவர் அமைச்சரானார். அவர் அமைச்சுப்பதவியை ஏற்று ஆறுமாதங்களில் என்ன செய்தார் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆறு மாதங்களில் 730 மில்லியன் ரூபாவுக்குமேல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.”
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” லயன்களை முழுமையாக ஒழித்து தனி கிராமம் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஜனாதிபதி, இந்திய தூதுவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மலையக பல்கலைக்கழகத்துக்கு அடித்தளமிட்டார். இப்படி பல வேலைத்திட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விளம்பரத்துக்காக சேவைகளை செய்யவில்லை, மக்களுக்காகவே செய்கின்றோம். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார்கள். ஜீவன் வந்தார். ஆனால், அனுபவம் இல்லை என்று சொல்கின்றனர். அவருக்கு அனுபவம் இல்லாவிட்டால் நுவரெலியா மாவட்ட தலைமைப்பதவியை கொடுத்திருப்பார்களா?” – என்றார்.