“மஹிந்த ராஜபக்ச அன்று வெளிநாடு செல்லும்போது இருந்த அதே எதிர்ப்பு இன்று நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது. எனினும், சவால்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சும் தலைவர் நாமல் கிடையாது.” என்று முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ எதிர்ப்பு வரும் என்பது தெரியும். எனினும், அழைப்பு விடுத்துவிட்டனர், எனவே, கலந்துரையாடச் செல்வோம் என்ற நோக்கிலேயே நாமல் சென்றார்.
உரைகள் இரத்து செய்யப்பட்டமை எமக்கு பெரிய விடயம் கிடையாது. ஏனெனில் நாமல் ராஜபக்ச தோல்வி அடையும் தலைவர் அல்லர்.
எனவே, அவரது உரை இரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பில் சில தரப்பினர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் நாமல் சிறந்த தலைவர் என்பது புலனாகியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாமல் ராஜபக்ச சவாலை ஏற்றதால்தான் இன்று மொட்டு கட்சியே எஞ்சியுள்ளது.” – என்றார்.
