2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது.
அவண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரின் அனுசாசணையின் பேரில் “உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து 59 ஆவது தேசிய புத்தரிசி விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
பண்டைய காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த சம்பிரதாய நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டதுடன் “நேரத்திற்கு மழை பொழிய வேண்டும் – விளைநிலங்கள் செழுமையாக வேண்டும்” என்று பிரார்த்தித்து, விவசாயத்தின் மூலம் நாடு தன்னிறைவு பெற்று, வளமான பொருளாதாரம் உருவாக வேண்டும் என நாடு மற்றும் தேசத்திற்காக ஆசி வழங்குவதும் பாரம்பரிய முறைப்படி இங்கு இடம்பெற்றது.
தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யவதற்கான தூய தேன் பானை இதன்போது ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதுடன்,ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு நெய் பூஜை செய்வதற்காக சப்ரகமுவ வரலாற்று சிறப்புமிக்க சமன் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் பானையும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
59 ஆவது தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், இந்நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்த விவசாய அமைப்புகளின் தலைவர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டினார்.
அங்கு சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயி கிங்ஸ்லி குமாரவும், பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயி டபிள்யூ. சுமித் லக்ஷ்மன் குமாரவும், மகாவலித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயி எச்.எம். உபாலி தர்மரத்னவும் ஜனாதிபதியிடமிருந்து பாராட்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.










