சுனாமிபோல் வந்த வெள்ளம்: திபெத் – நேபாள எல்லையில் பேரழிவு! பலர் மாயம்!!

திபெத்தில் இருந்து உருவெடுத்து போதேகோஷி (Bhotekoshi) ஆற்றில் பாய்ந்த திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் இன்று புதன்கிழமை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த பேரழிவில் இதுவரை குறைந்தது 9 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுள்ளதுடன் 291 வெளிநாட்டினரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன வெளிநாட்டவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த மூவர், மலேசியாவைச் சேர்ந்த 17 பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 12 பேர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நால்வர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர் என நேபாள சுற்றுலா திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 103 பேரின் விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த வெள்ளத்தால் ஆற்றங்கரையோரக் குடியிருப்புகள் முற்றிலும் அழிந்துள்ளதுடன், குறைந்தது 12 நீர்மின் திட்டங்கள் பெரும் சேதமடைந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அதிர்ச்சி தரும் காணொளிகளில், திரிசூலி பஜார் பகுதி கொந்தளித்து வரும் வெள்ளத்தின் முழு வீச்சை எதிர்கொள்வதும், வீடுகள் நீரில் மூழ்குவதும், வெள்ளப்பெருக்கினால் கட்டடங்கள் இடிந்து விழுவதும் தெளிவாகக் தெரிகிறது. அப்பகுதி முழுவதும் வீடுகள், வீதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன.

திபெத்திய பகுதியில் கணிசமான மழை பெய்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டினாலும், ரசுவாவில் பெய்த மழையினால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என நீரியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள இராணுவத்தின் உதவியுடன் அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ரசுவா, நுவாகோட், தாடிங், சித்வான் உள்ளிட்ட பல கீழ்நிலை மாவட்டங்கள் தீவிர எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மீட்புப் பணிகளுக்காக நேபாள அரசு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் அளவு வழக்கத்திற்கு மாறாக மிகவும் அதிகமாக இருந்ததாகவும், இரண்டு குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ரசுவா உதவி மாவட்ட தலைமை அதிகாரி துருவ பிரசாத் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுங்க வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மற்றும் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், சமீபத்தில் கட்டப்பட்ட பாலம் தகர்க்கப்பட்டதாகவும் ரசுவா தலைமை சுங்க அதிகாரி ராஜேந்திர துங்கானா கூறியுள்ளார்.

இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த நேபாள இராணுவம், ஆயுதமேந்திய பொலிஸ் படை மற்றும் நேபாள பொலிஸார் ரசுவா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ளதாக நேபாள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நிலமையை மதிப்பிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க உயர்மட்டக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles