நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் இல்லை

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கையளிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது:

“கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயன்றன. மேலும், அவர் பிரதமர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இறுதிவரை அவர்களின் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

அதேபோல, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜெயக்கொடிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தார்கள். ஆனால், அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின்படி, சுயாதீனமான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் அவராகவே பதவி விலகினார். இதில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பிரேரணையால் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அப்படித்தான்; இதனால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை” என்று நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related Articles

Latest Articles