நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று (08) பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான இன்றைய வழக்கு விசாரணையின்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் இணையவழி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதுவரையிலான விசாரணைகளில் 2 கோடியே 85 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த தொகையும் இந்த மோசடியோடு தொடர்புப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் விசாரணைகளை சி.ஐ.டியிடம் ஒப்படைக்குமாறு ஹட்டன் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி அந்தோணிசாமி பீட்டர் போல் உத்தரவிட்டார்.
இதேவேளை, நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்










