இலங்கையின் தேசிய அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு, முந்தைய மாதத்தை விட 0.5% அதிகரித்து, ஜூலை மாதம், ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 17,679 ஆக உயர்ந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச மாதாந்தச் செலவு, ஜூன் மாதத்தில் ரூ. 17,592 ஆக இருந்த நிலையில், ஜூலையில் ரூ. 87 அதிகரித்துள்ளது.
இந்த வரம்பு, 2025 ஜூலையில், ரூ. 16,484 ஆக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 7.2% அதிகரித்து, ரூ. 1,195 உயர்ந்துள்ளது.
2025 ஜனவரிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த தேசிய வறுமைக் கோடு ஜூலை மாத புள்ளிவிவரமாகும்.
இது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ. 16,730 ஆக இருந்த நிலையில், ரூ. 949 அல்லது 5.7% அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டம், ஜூலை மாதத்தில் ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 19,067 என்ற மிக உயர்ந்த மாவட்ட வறுமைக் கோட்டைப் பதிவு செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டம் ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 18,969 மற்றும் நுவரெலியாவில் ரூ. 18,592 வறுமைக்கோடு எல்லையாக உள்ளது.
மொனராகலயில் மிகக் குறைந்த வரம்பாக ரூ. 16,904 பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கிளிநொச்சியில் ரூ. 17,080 மற்றும் அம்பாந்தோட்டையில் ரூ. 17,177 பதிவாகியுள்ளது.
மிக உயர்ந்த மற்றும் மிகக் குறைந்த மாவட்ட வரம்புகளுக்கு இடையிலான வித்தியாசம் ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 2,163 ஆகும்.
