கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி லொத்தர் விற்பனை நிலையம் தரைமட்டம்: சாரதி பலி

அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய பட்டா ரக வாகனம் ஒன்று, கல்முனை தாழவட்டுவான் சந்திக்கு அருகில் பயணித்தபோது திடீரெனச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அதிவேகமாக வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொத்தர் விற்பனை நிலையம் முற்றாகத் தரைமட்டமானதுடன், அங்கிருந்த கட்டடத் தூண்கள் மற்றும் மின் சாதனங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கையில், பட்டா வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளனர். வாகனத்தின் சாரதியைக் காப்பாற்ற முற்பட்டபோது, அவரது வாயிலிருந்து நுரை தள்ளியதுடன் பாரிய மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பட்டா வாகனத்தின் சாரதியும், லொத்தர் விற்பனை நிலையத்திலிருந்தவரும் அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொலனறுவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles