வெள்ளப்பெருக்கு அபாயம்!

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், மகாவலி, களனி மற்றும் களு கங்கை ஆகியவற்றின் மேல்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவிக்கின்றார்.

அதன்படி, மகாவலி கங்கையின் மேல்பகுதிகளான நாவலப்பிட்டி, நானுஓயா, வட்டவளை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக நாவலப்பிட்டி முதல் பேராதனை வரையிலான மகாவலி கங்கை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நீர்மட்டம் திடீரென அதிகரிக்கும் நிலை இல்லை என்றாலும், தொடர்ச்சியான உயர்வு பதிவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வெள்ளநிலை, தித்வா அனர்த்தத்தின் போது ஏற்பட்ட அளவுக்கு மோசமடையும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும், நேற்று இரவு சில பகுதிகளில் 70 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை குறுகிய நேரத்தில் பெய்ததால் தற்காலிகமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.

அதேவேளை, களனி கங்கையின் மேல்பகுதிகளான லக்ஷபான, நோர்வுட் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளது. இதனால் கித்துல்கலை உள்ளிட்ட களனி கங்கையின் மேல்பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தற்போது அந்த நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தாலும், தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் தொடர்கிறது. குறிப்பாக ஹங்வெல்ல முதல் அவிசாவளை வரையிலான பகுதிகளிலும், அவிசாவளை, கித்துல்கலை மற்றும் நோர்வுட் இடையிலான தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் உருவாகும் சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், களனி கங்கையின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கும் நிலை காணப்படவில்லை என்றும், அதன் கீழ்ப்பகுதிகளில் மட்டும் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இரத்தினபுரி மேல்பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக இரத்தினபுரியில் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை எட்டியிருந்தாலும், அது வேகமாக அதிகரிக்கும் நிலை இல்லை. இருப்பினும் சில தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஈர வலயத்திலுள்ள நில்வளா கங்கை, கிங் கங்கை உள்ளிட்ட ஏனைய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ள போதிலும், அவை வெள்ள நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படவில்லை.

அதேபோல், மா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகாததால், அந்தப் பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles