அஸ்வெசும ஊழல்: நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் இருவருக்கு மறியல்

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 04-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இவ்விரு உத்தியோகத்தர்களும் 2025-ஆம் ஆண்டு முதல் 29 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபா வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அஸ்வெசும திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வரும் 30-க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகவும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அஸ்வெசும தரவுகள் அடங்கிய கணினிகளையும் உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கைது பின்னணி

முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இந்த இரு அரச ஊழியர்களுக்கும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அதனைத் தொடர்ந்து, குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளரால் ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், கடந்த 31.07.2026 (வெள்ளிக்கிழமை) மாலை ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், “அஸ்வெசும ஊழல் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles