அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்

அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்த சம்பவத்தால் இன்று காலை சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்புல்லபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று காலை சுமார் 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக வீதியோரத்தில் இருந்த பாரிய மரம் திடீரென முறிந்து, அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த பஸ் மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் முற்றாகத் தடைபட்டது. பின்னர், பிரதேச மக்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்றியதைத் தொடர்ந்து ஒரு வழிப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்பின்னர், தோட்ட நிர்வாகத்தினரும் பிரதேச மக்களும் இணைந்து மரத்தை முழுமையாக வெட்டி அகற்றியதையடுத்து, வீதிப் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், மரம் விழுந்ததில் குறித்த பஸ்ஸிற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழையுடன் இரவு நேரங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதுடன், மின்கம்பங்கள் மற்றும் மின்விநியோக கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு கொட்டகலை மற்றும் ஹட்டன் பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் பல மணி நேரம் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியான மழையால் மாவட்டத்தின் நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்வதையும், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீராடுவதையும் தவிர்க்குமாறு பாதுகாப்பு பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் தங்களது பாதையில் மட்டுமே வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தொடர்ச்சியான அடைமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கான புல் சேகரிப்பதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

மழை காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை உற்பத்தியும் குறைவடைந்துள்ளதாகவும், அதேநேரம் கொட்டும் மழையிலும் நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை பறிக்க வேண்டுமென நிர்வாகம் இலக்கு நிர்ணயிப்பதால் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்று நிலவும் இந்தக் காலப்பகுதியில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles