‘P2P எழுச்சி பேரணி’ – பொலிஸாரின் கைது வேட்டை ஆரம்பம்!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்பாகக் காத்திருக்கின்றனர். இளைஞனின் தாயார், மகனின் விடுதலையைக் கோரி பொலிஸ் நிலையம் முன்பாக கதறி அழுகின்றார்.

பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles