Home Blog Page 101

சாத்தியமானது சங்கமம்: இரு தலைவர்களும் விரைவில் சந்திப்பு!

“ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் 99.99 சதவீதம் வெற்றியடைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்குச் செல்வார்.

அத்தோடு இரு கட்சிகளினதும் செயற்குழுக்களை ஒன்றிணைத்து கூட்டு செயற்குழுக் கூட்டமொன்றை சிறிகொத்தாவில் நடத்த எதிர்பார்த்துள்ளோம். கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்,

“புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா பெப்ரவரி 4ஆம் திகதி முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஒரு தளமாக பரிணமிக்கவுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குப் புத்துயிரூட்டும் வகையில் கட்சி மீளக் கட்டியெழுப்பப்படும். ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐ.தே.க. செயற்குழுவில் இதுகுறித்த யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்குச் செல்வார். அத்தோடு இரு கட்சிகளினதும் செயற்குழுக்களை ஒன்றிணைத்து கூட்டு செயற்குழு கூட்டமொன்றை சிறிகொத்தாவில் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

எனவே, எம்மில் இருந்து பிரிந்து சென்ற நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்காக சிறிகொத்தாவைத் தூய்மைப்படுத்தி அழகுபடுத்தியுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் 99.99 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.

கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும். அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில், தான் தற்போது செயற்பாட்டு அரசியலில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் அவர் ஓர் ஆலோசகராகச் செயற்பட்டு இக்கட்சியை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு வழிநடத்துவார். அது மாத்திரமின்றி இருதரப்பு இணக்கப்பாட்டுடன் தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்படும். எது எவ்வாறிருப்பினும் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பதே தற்போதைய அத்தியாவசிய தேவையாகும். அதற்கமைய நிபந்தனையின்றி நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவோம். அதன் பின்னர் பாரிய பயணமொன்றை ஆரம்பிப்போம்.

நாம் இணைந்தால் அது அரசுக்குப் பாரிய சவாலாகும். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் அதேவேளை, ஏனைய எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசுக்கு எதிரான பாரிய பலம் மிக்க கூட்டணியொன்றை உருவாக்குவோம். பரந்துபட்ட கூட்டணி எதிரணியை உருவாக்குவதற்கும் ரணில் விக்கிரமசிங்க எமக்கு ஆலோசனைகளை வழங்குவார்.” – என்றார்.

சதி செய்தவர்களுக்கு மதிமூலம் பதிலடி: இலங்கையில் பெண் தலைமைத்துவத்துடன் மலர்ந்த முதலாவது கட்சி!

சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகாரமளிக்கப்பட்ட அரசியல் கட்சியாக புரட்சிகர மக்கள் சக்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் விளக்களிக்கும் முகமாக புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தலையில் ஹட்டனில் அமைந்துள்ள புரட்சிகர மக்கள் சக்தியின் காரியாலயத்தில் ஒரு ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் வருமாறு,

” எமது கட்சியான புரட்சிகர மக்கள் சக்தியை 2020ம் ஆண்டளவில் ஆரம்பித்தோம். கட்சியின் ஆரம்ப பெயராக சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்றே காணப்பட்டது. 1981ம் ஆண்டு 1ம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைவாக எமது கட்சியின் பெயர் சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்னும் பெயரிலிருந்து புரட்சிகர மக்கள் சக்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

எமது புரட்சிகர மக்கள் சக்தி 2026ம் ஆண்டு தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்படுகிறது.

எமது கட்சியின் பெயர் தமிழில் புரட்சிகர மக்கள் சக்தி சிங்களத்தில் விப்லவவாதி ஜனதா பலய ( විප්ලවවාදි ජනතා බලය) ஆங்கிலத்தில் ரிவலூஷனரி பீப்பள்ஸ் பவர் (Revolutionary Peoples Power)

புரட்சிகர மக்கள் சக்தி கட்சியின் சின்னம் கை கோடரி / Hand Axe / අත් පොරව

எமது கட்சி கொடியின் நிறம் சிவப்பு வெள்ளை கறுப்பு ஆகிய நிறங்கள்.

இலங்கை வரலாற்றில் ஒரு பெண் தலைமைத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மலையக கட்சி இந்த புரட்சிகர மக்கள் சக்தி.

ஒரு சட்டத்தரணியாக, ஒரு பெண்ணாக, மலையக பெண்ணாக எனக்கும் இந்த கட்சி அங்கீகரிக்கப்பட்டது பெருமையே!

மலையக வரலாற்றில் அமரர் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அவர் கொள்கை அரசியலை முன்னெடுக்கும் இந்த அனுஷா சந்திரசேகரனுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் புரட்சிகர மக்கள் சக்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது, எனக்கும் நேர்மையாக, சுயாதீனமாக அரசியலில் ஈடுபட எண்ணும், விரும்பும் எதிர்கால மலையக இளைஞர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

தவிர்க்க முடியாத காரணங்களால் எங்களுடைய புரட்சிகர மக்கள் சக்தி இதுவரை காலமும் எமது செயற்பாடுகளை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மேற்கொண்டிருந்தாலும், இனி நாடளாவிய ரீதியில் எமது கட்சி இயங்கும், நாம் எமது செயற்பாடுகளை விஸ்தரிக்கிறோம்.

அதற்காக ஆர்வமுள்ள, உண்மையான உணர்வுள்ள, நேர்மையாக அரசியல் செய்ய விரும்பும் அனைவரையும் அரவணைத்து இணைத்துக்கொண்டு நாம் எமது பணிகளை மேற்கொள்வோம். ஆர்வமுள்ள அனைவரையும் எம்முடன் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

தலவாக்கலை மண்ணிலிருந்து இலங்கை அரசியலில் தடம் பதிக்கும் இரண்டாவது கட்சியாக இந்த புரட்சிகர மக்கள் சக்தி உருவாகியிருக்கிறது. தலவாக்கலை மண்ணில் முதலாவதாக உதித்த மலையக மக்கள் முன்னணி எனது தந்தை சந்திரசேகரன் அவர்களால் உருவாக்கப்பட்டது. அந்த மலையக மக்கள் முன்னணி எனது தந்தை இருக்கும் வரை எவ்வளவு சேவைகளை இந்த மக்களுக்கு வழங்கியதோ, அதேபோன்று புரட்சிகர மக்கள் சக்தியும் மக்களுக்கான சேவைகளை வழங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் படத்தேவையில்லை.

இந்த கட்சியில் எந்த ஜாதி சங்கங்களுக்கோ, மத சங்கங்களுக்கோ இடமில்லை. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளுக்கோ வர்க்க பேதங்களுக்கும் இடமில்லை. அனைவருக்கும் சம உரிமை உண்டு, சம வாய்ப்பு வழங்கப்படும்.

இலங்கை வரலாற்றில் ஒரு புதிய சரிதம் படைக்க போகும் இந்த புரட்சிகர மக்கள் சக்தியில் இணைந்து நமது சமூகத்தின் நிலையை உயர்த்த நாம் புரட்சிகரமாக ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நான் கூறும்போது பலருக்கு பல தெளிவின்மை, பல சந்தேகங்கள் ஏற்படலாம். பல தேர்தல்களில் பல கட்சிகளினூடாகவும், பல சின்னங்களினூடாகவும் போட்டியிட்டிருக்கிறேன். ஆகவே இது என்ன புதிய கட்சி, புதிய சின்னம் என பலருக்கும் பல தெளிவின்மைகள், சந்தேகங்கள் எழலாம். ஆகவே அதை சற்று விரிவாக தெளிவுபடுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன்.

2020ம் ஆண்டு சுயேட்சையாக கோடரி சின்னத்தில் நான் களமிறங்கியிருந்தேன் பாராளுமன்ற தேர்தலில், 17107 வாக்குகள் எனக்கு கிடைக்கப்பெற்றது. 1000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நான் பின்னடைவை சந்தித்திருந்தேன். 2018ம் ஆண்டு எனக்கு , என்னுடைய தந்தையினாலும் எனது தனதையோடு இணைந்து சிறைவாசம் அனுபவித்த, பல போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியால் எனக்கு பிரதி செயலாளர் நாயகம் என்ற அதிகாரமற்ற ஒரு பதவி தரப்பட்டிருந்தது.

2020ல் தேர்தலுக்கு பிறகு அந்த பிரதி செயலாளர் நாயகம் என்ற பதவியும், மலையக மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் என்னை நீக்கினார்கள். அப்போதைய செயலாளர் நாயகம் மறைந்த லோரன்ஸ் அவர்களின் தலைமையில் என்னை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இது அந்த காலத்தில் ஒரு பேசுபொருளாக இருந்தது.

இத்தனை வருடம் கட்சிக்காக நான் உழைத்தேன், போஸ்டர் ஒட்டினேன் எனக்குதான் பதவி வேண்டும், அடுத்த செயலாளர் நாயகம் நான் தான், நான் தான் கல்விமான், நான் பேராசிரியர் எனக்கு இந்த பதவி வேண்டும் என்று பதவி வெறிபிடித்து அலைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள். ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமென்றால் இந்த அதிகாரம் அற்ற பிரதி செயலாளர் நாயகம் என்ற பதவி என்பது பெரிதாக இருக்கலாம்.

அரசியல் தலைமைகள் தூக்கிபோடும் எழும்பு துண்டுகளுக்கு வாலாட்டுபவர்களுக்கு இந்த பதவிகள் பெரிதாக இருக்கலாம், ஆனால் 1994ம் ஆண்டு இலங்கை அரசியலையே புரட்டிப்போட்ட உலகறிந்த தலைவர் அமரர் சந்திரசேகரனின் அரசியலை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவருடைய உரையை நான் கேட்டிருக்கிறேன். அவருடைய கொள்கைகளை உள்வாங்கியிருக்கிறேன்.

என்னுடைய நாடி நாளம் முழுவதும் என்னுடைய தந்தை சந்திரசேகரன் அவர்களிடைய புரட்சிகர ரத்தம் ஓடுகிறது. அப்படிப்பட்ட அனுஷா சந்திரசேகரனுக்கு அந்த பதவிகளோ கட்சிகளோ பெரிய விடயமாக தெரியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டும்தான் இருந்தது.

எமது மக்களுக்கு நிலவுரிமை வேண்டும், எமது மக்கள் கல்வியில் மேம்பட வேண்டும், நாளை பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு, ஆண் குழந்தைக்கு , மலையகத்தில் பிறக்கப்போற குழந்தைகளுக்கு நல்ல வளமான எதிர்காலத்தை உருவாக்கித்தர வேண்டும் என்ற ஒரே ஒரு. நோக்கம் மட்டும் தான் இருந்ததே தவிர, அதற்காக தான் நான் அரசியலுக்கு 2018ம் ஆண்டு வந்தேனே தவிர , என்னுடைய வருவாயை ஈட்டிக்கொள்வதற்காகவோ, என்னுடைய வியாபாரத்தை காப்பாற்றிக்கொள்ளவோ நான் அரசியலுக்கு வரவில்லை. எனக்கு சட்டத்தரணி என்ற் தொழில் இருக்கிறது.

அந்த தொழிலின் மூலமாக நான் வருவாயை ஈட்டிக்கொள்ள முடியும், 1994ம் ஆண்டு ஆரம்பித்த எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் பயணம் 2010 ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அவர் வாழ்ந்த 16 வருடங்களில் தனி வீடமைப்பு திட்டமாக இருக்கட்டும், மின்சார வசதிகளை வழங்குவதாக இருக்கட்டும், கல்வி அபிவிருத்தியாக இருக்கட்டும், விளையாட்டு துறை அபிவிருத்தியாக இருக்கட்டும். அனைத்து துறைகளிலுக் வளர்ச்சியை உருவாக்கிவிட்டே அவர் மறைந்தார்.

அவர் மறைந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 16 வருடங்களில் ஒரு அரசியல் வரட்சியை தான் நான் பார்க்கிறேன். ஒரு சரியான ஒரு தலைமைத்துவம் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே. பல கட்சிகள் இருக்கின்றன. பல அரசியல் தலைமைத்துவங்கள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அமையப்பெறும் கூட்டணிகள் மக்களுக்கான கூட்டணிகளாக தெரியவில்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளை சேகரிப்பதற்காக மட்டும் தான் இந்த கூட்டணிகள் இருக்கின்றன. அவர்கள் மக்களுக்கான அரசியலை செய்வதாகவும் தெரியவில்லை.

தங்களுடைய வியாபாரத்தையும், தங்களுடைய இருப்பையும் காப்பாற்றுக்கொள்வதற்கான அரசியலைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தலைமத்துவத்தில் ஒரு வறட்சி, அரசியலில் ஒரு வறட்சி நிலையே காணப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடைபெறுகிறது. அலைகளில் எமது இளைஞர்கள் அள்ளுண்டு சென்று வாக்குகளை வழங்குகிறார்கள். தேசிய கட்சிகளுடன் இணைந்து செயற்படுகிறார்கள், அது எமது இளைஞர்களுக்கு எதிர்கால கேள்விக்குறியாக மாறிப்போய் இருக்கிறது. இது அவ்வளவுக்கும் காரணம் எமது மலையகத்தில் இருக்கும் அரசியல் தலைமைகளின் அரசியல் வறட்சியும் அரசியல் தலைமைத்துவ வறட்சியும் தான் காரணம்.

இதை எல்லாம் உள்வாங்கி தான் பத்தோடு பதினொன்றாக இருந்துவிடாமல் ஒரு அரசியல் செய்ய வேண்டும், அது பல நூற்றாண்டுகளுக்கு பேசப்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு புரட்சிகர மக்கள் சக்தியை ஆரம்பித்தேன்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், நான் சிறுவயதில் இருந்து பார்த்த, எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் அரசியலை, எதிர்கால சந்ததியினரும் பார்க்க வேண்டும். எதிர்கால சந்ததியினரும் அந்த அரசியலின் மூலமாக பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் 1989ம் ஆண்டு எனது தந்தை சந்திரசேகரன் அவர்கள் எப்படி மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியை உருவாக்கினாரோ, தான் இருந்த ஒரு கட்சியை விட்டு விலகி வந்து மலையக மக்கள் முன்னணி என்னும் கட்சியை உருவாக்கினாரோ, அதே போல மக்கள் மக்கள் முன்னணியில் இருந்து நான் விலகி புரட்சிகர மக்கள் சக்தி என்ற புதியதொரு கட்சியை நான் உருவாக்கினேன். சந்திரசேகரன் மக்கள் முன்னணியாக இருந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 07 வருடமாக மூன்று அரசாங்கங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம், 2020 ஆண்டுகளில் ஒரு அரசாங்கம் வந்தது. இதுதான் இன்னும் 20, 25 வருடங்களுக்கு இந்த அரசாங்கம் தான் நிலைக்க போகிறது என்று விமர்சித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் தான் இனி இலங்கையை ஆளப்போகிறார்கள் என்று நிறைய பேர் விமர்சித்திருந்தார்கள். ஆனால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது. இன்னும் இரு இடைக்கால அரசாங்கம் வந்தது. இந்த இடைக்கால ஜனாதிபதிதான் இனி நாட்டை கொண்டு நடாத்துவர், இனி இவர்தான் பத்து வருடங்களுக்கு இருக்கப்போகிறார் என்று சொன்னார்கள். அதுவும் கவிழ்ந்து இப்போது இன்னுமொரு அலையில் ஒரு அரசாங்கத்துடன் காலம் கடந்துகொண்டிருக்கிறது.

நாம் இவ்வாறு குறிப்பிடும் போது எந்த அரசாங்கத்துக்கும் புரட்சிகர மக்கள் சக்தியாக நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்புக்கு அமைய நாங்கள் மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டும்தான் எங்களுக்கு இருக்கின்றது. தனி ஒருவரின் விருப்பு வெறுப்பிற்காக, அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் விருப்பு, வெருப்பிற்காக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல. குறிப்பிட்ட குழுக்களின் தேவைகளுக்காக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல.

ஏனென்றால் மக்களோடு மக்களாக நாங்கள் களத்தில் நிற்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிகள் இருப்பவர்களும் சரி, அமைச்சுப்பதவிகளை வைத்துக்கொண்டு அலங்கரிப்பவர்களும் சரி மக்களோடு மக்களாக இருக்கிறார்களா என சிந்தித்து பார்க்க வேண்டும்.

பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்காக நாங்கள் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்தினூடாக உதவிகளை செய்து வருகிறோம். அதேபோன்று இப்போது அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை நாம் செய்திருக்கிறோம். உதவியின் அளவு சிறிதாக இருக்கலாம், இருந்தாலும் எத்தனையோ பேர் பதவிகளையும், அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு உதவிகள் செய்யாமல் இருக்கும் போது எங்களால் முடிந்த உதவிகளை செய்வதை மக்கள் பெரிய விடயமாக பார்க்கிறார்கள். எமது மக்களுக்காக எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக நாம் வகுத்திருக்கும் திட்டங்களையும், உரிமை சார் விடயங்களையும் மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் எமது கட்சியின் மூலமாக மேற்கொள்வோம். இதற்காக நாம் அனைவரையும் ஒன்று திரட்ட அவசியமான அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வோம் என்பதனையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

எங்களுடைய அரசியல் கொள்கைகளாக காணி உரிமை, அதேபோன்று ஆரோக்கியமான வாழ்க்கை நிலையை எமது மக்களுக்கு வழங்குதல், கல்வி அபிவிருத்தி, தோட்ட தொழிலாளர்களுக்கான உரிமை சார் விடயங்கள் தொடர்பில் பங்கெடுத்தல், சுகாதார மேம்பாடு என்பது எமது பிரதான கொள்கையாக, பிரதான நோக்கமாக பெருந்தோட்ட மக்களுக்காக இரு தனியான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் முன்வைக்கிறோம்.

எனது தந்தை அமரர் சந்திரசேகரனது கட்சியை சதியினால் கைப்பற்றியிருக்கலாம்.
ஆனால் நாம் எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மதியினால் புரட்சிகர மக்கள் சக்தியை உருவாக்கியிருக்கிறோம்” – என்றார்.

ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதி: வடக்கு ஆளுநர்

” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான்.

இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்.” – என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று திங்கட்கிழமை (26.01.2026) காலை கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

‘நேர்மையான தேசத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது.

மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை.

கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும், என்றார்.

வடக்கு மாகாணத்தில் மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் முதல் நாளான இன்று, யாழ். மாநகர சபை மற்றும் யாழ். மாவட்டத்தின் 7 பிரதேச சபைகளின் (வலி. வடக்கு, வலி. மேற்கு, வலி. தென்மேற்கு, காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை) கௌரவ தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) எஸ்.எம்.சப்ரி தொடக்கவுரையாற்றினார். வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் வரவேற்புரையாற்றினார்.

வளவாளர்களாகக் கலந்து கொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி செத்திய குணசேகர மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் ஆகியோர், ‘ஊழலற்ற உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டியெழுப்புதல்’, ‘ஊழலை எதிர்ப்பதில் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளின் பங்கு’ மற்றும் ‘சட்டப் பின்னணி’ ஆகிய தலைப்புகளில் விரிவுரையாற்றினர்.

சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் – வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகள் மற்றும் யாழ். மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை செவ்வாய்கிழமை (27.01.2026) நடைபெறும்.

வவுனியா மாநகர சபை மண்டபத்தில் – வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை மறுதினம் புதன்கிழமை (28.01.2026) நடைபெறும்.

இணைந்து பயணிக்க தமிழ்த் தேசியக் கூட்டணி நிபந்தனையற்ற ஆதரவு!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் முதன்மைக் கட்சியாக இருந்தாலும் கூட தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு. அந்தப் பொறுப்பை ஏற்று அதற்கான பணிகளை இந்த வருட ஆரம்பத்தில் நாங்கள் தொடங்கியுள்ளோம்.

கடந்த உள்ளூராட்சி சபை, நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிரும் புதிருமாறு நின்ற ஜனநாயகத் தேசியக் கூட்டணியுடனான ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். அதில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு செயற்படுவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.

மீண்டும் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என்று நானும் எமது கட்சியின் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அந்த அழைப்பைத் தொடர்ந்து எங்களுடன் அவர்கள் பேசினார்கள். ஜனநாயகத் தேசியக் கூட்டணியைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை.

பரந்தமனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள். அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகளை ஏனையவர்களிடம் இருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

சிங்கள தேசியக் கட்சிகளால் எங்களுக்கு விடிவு கிடைக்காது. அவர்களது கட்சிக்குள் எங்களது மக்களும் ஊடுருவி நாடாளுமன்ற உறுப்பினர்களாக, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்குச் சிங்களத் தலைமைகளுக்கு மேலாகச் செல்ல முடியாது.” – எனவும் தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின விழா கோலாகலம்!

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.

தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்றது.

குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர்களாக இந்த விழாவில் பங்கேற்ற ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் வருகை தந்தனர்.
அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் 21 குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிட்டார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை இசைக்க கலைஞர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ராணுவம், கடற்படை, விமானப் படை, சிஆர்பிஎஃப் படை வீரர்கள், என்சிசி, என்எஸ்எஸ் படை அணிவகுத்தன. பின்னர் மத்திய அரசின் 13 துறைகள் மற்றும் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன.

இதில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய பிரதான ஆயுத அமைப்பின் மாதிரி வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 30,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏராளமான மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் Rebuilding Sri Lanka
வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, அனர்த்தத்தால் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருவதோடு, அதற்காக நாடு பூராகவும் உள்ள நன்கொடையாளர்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். காணி நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களை 0112331246 என்ற தொலைநகல் (Fax) இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரஜையையும் கைவிடாது, அவர்களின் வாழ்க்கையை முன்பை விட உயர்ந்த தரத்திற்கு மீண்டும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அந்த சகோதர மக்களுக்காக, Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு, நாடு பூராகவும் உள்ள அனைத்து நன்கொடையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்

இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளன.

“வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினரால், கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

96.2 மீட்டர் நீளமான கடல்சார் ரோந்துக் கப்பலான “வராஹா” கப்பல், கட்டளை அதிகாரி அஷ்வினி குமாரினால் வழிநடத்தப்படுகிறது.

50 மீட்டர் நீளமான அதிவே ரோந்துக் கப்பலான “அதுல்யா” கப்பல், கட்டளை அதிகாரி அனித் குமார் மிஸ்ராவினால் வழிநடத்தப்படுகிறது.

இந்தக் கப்பல்கள்இலங்கைகடலோர காவல்படையினருடனான பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (26.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (26.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீதரனை நீக்க முடிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் பணிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவரிடமிருந்து மீளப் பெற கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்விடயம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“சிறீதரனுக்கு நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல் குழுவின் கூட்டத்தில் அந்த நேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார்.

அந்த நேரத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்குவதற்கும் அந்த அரசியல் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாங்கள் நியமித்தோம்.

நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் இவை பற்றி ஆராயப்பட்டன.

அரசியல் குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல் குழுவுக்கே இருக்கின்றது. எந்தக் குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்தக் குழுவுக்கு உண்டு.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அதே அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் அரசமைப்புக் கவுன்ஸிலிலிருந்து இராஜிநாமாச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை ஏகமனதாக வழங்கியிருந்தது. நேற்றைய தினம் சுமார் நான்கு மணி நேரம் அதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே கட்சியின் எந்த உயர் குழு அவருக்கு அந்தப் பதவியை வழங்கியதோ, அந்தக் குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்தப் பதவியை அவரிடமிருந்து எடுப்பது எனத் தீர்மானித்தோம்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக பெண் இராணுவ தளபதி நியமனம் !

0
125 வருடகால ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதன்முறையாக இராணுவ தளபதி பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுத் திறன்களுக்கான தளபதியாக (Chief of Joint Capabilities) பதவி வகிக்கும் சூசன் கோய்ல் (Susan Coyle), புதிய...