பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவனி!

 

நுவரெலியா, பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்தேர் பவனி இன்று (25) பக்திபூர்வமாக நடைபெற்றது.

இவ் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

23ஆம் திகதி சனிக்கிழமை புண்ணியவாசனம் மற்றும் விசேட கிரியைகளுடன் பால்குட பவனி நடைபெற்றதுடன், பிற்பகல் மகேஸ்வர பூஜையை அடுத்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாலையில் வேட்டைத் திருவிழாவும் விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பறவைக் காவடி மற்றும் தீமிதிப்பு உற்சவம் என்பன நடைபெற்றதோடு, மாலை வேளையில் திருக்கல்யாண வைபவமும் பக்திபூர்வமாக அரங்கேறியது.

விழாவின் முக்கிய நாளான நேற்று 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை, மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று, திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவாரப் பாராயணங்கள் ஒலிக்க, உற்சவ மூர்த்திகளான விநாயகப் பெருமான், முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் எழுந்தருளி வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இத்தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.

இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மாவிளக்கு பூஜையுடன் பச்சை சாத்துதல் மற்றும் பூங்காவன பூஜை என்பன நடைபெறவுள்ளன.

நாளை 27ஆம் திகதி புதன்கிழமை தீர்த்த உற்சவமும், கரகம் வீதியுலாவும் நடைபெற்று, கொடியிறக்கத்துடன் வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.

பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவைக் காண்பதற்காக மலையகத்தின் நாலாபாகங்களிலிருந்தும் ஏராளமான பக்த அடியார்கள் வருகை தந்து, வழிபாடுகளில் ஈடுபட்டுத் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டி சந்ரு

Related Articles

Latest Articles