பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து: சட்டமூலம்மீது நாளை விவாதம்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை (09) விவாதம் நடைபெறவுள்ளது.நாளை மாலையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் குறித்த குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கப் பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி சட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

காலத்திற்கேற்ற தேவைகளுக்கு அமைவாக, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் நிலைமையைக்
கருத்திற்கொண்டு, முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தனியான அலுவலகமொன்றையோ பதவியொன்றையோ தொடர்ந்து பேண வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால், தற்போது முன்னெடுக்கப்படும் முப்படைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ், குறித்த ஒருங்கிணைப்புப் பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, குறித்த அலுவலகத்தின் பணிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுச் சுமையைக் குறைக்க முடியும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டெம்பர் 09ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா கடைசியாக இப்பதவியை வகித்தார். அவர் ஓய்வுபெற்ற பின்னர் இப்பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இப்பதவியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles