தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை பேரம் தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,500க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, மழை பெய்யும் காலங்களில் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, பாதைகள் மற்றும் குறுக்குப் பாலம் நீரில் மூழ்குவதால், மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
தற்போது இப்பகுதியில் காணப்படும் பாலம் சேதமடைந்த நிலையில் இருப்பதால், மக்கள் மரக்குற்றிகளைப் பயன்படுத்தி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் ஆற்றுப்பகுதியில் சுமார் 3 முதல் 4 அடி உயரம் வரை நீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் உட்பட அனைவரும் பெரும் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுக்கும் போது, இப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்து முற்றாக பாதிக்கப்படுவதுடன், அவசர மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
“ஒவ்வொரு மழைக்காலமும் எங்களுக்கு அச்சத்துடனான பயணமாகவே உள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்களை இந்த ஆபத்தான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
நிரந்தரமான பாதுகாப்பான பாலம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும்” என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பையும் எதிர்கால நலனையும் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை நேரில் பார்வையிட்டு மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக நிரந்தரமான, பாதுகாப்பான பாலம் ஒன்றை அமைத்துக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆபத்தான மரப்பாலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பாதுகாப்பான பாலத்தை அமைத்துத் தருவதே லிந்துலை பேரம் தோட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
