286 டொலருக்கு மசகு எண்ணெய் வாங்கப்படவில்லை- பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மறுப்பு

ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.

இந்த அறிக்கைகள் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்று விபரித்துள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக மட்டுமே, மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதாகவும், கூறப்பட்ட விலையில் எந்தவொரு சரக்கும் வாங்கப்படவோ அல்லது ஒப்பந்தம் செய்யப்படவோ இல்லை என்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைமைக்குப் பின்னர், சிறிலங்காவுக்கு இன்று முதலாவது மசகு எண்ணெய் கப்பல் வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

286 டொலருக்கு எண்ணெய் வாங்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல்களை நிராகரித்த பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், மத்திய கிழக்கில் மோதல் வெடித்த பின்னர் பெறப்பட்ட மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சராசரியாக 71.99 டொலர், 111.62 டொலர், 71.81 டொலர் மற்றும் 113.29 டொலர் என விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.

இந்த விலைகள், தற்போது நிலவும் உலகளாவிய சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது சாதகமாகவே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையற்ற சந்தை நிலவரங்கள் இருந்தபோதிலும், மசகு எண்ணெயைப் பெறுவதில் போட்டித்தன்மை வாய்ந்த நிலையைத் தக்கவைத்துள்ளதாகவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்ட பொய்க் கூற்றுகளைக் கண்டித்துள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர், பொதுமக்களிடையே கவலையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஹொங்கொங்கில் நடந்த ஒரு முதலீட்டுக் கருத்தரங்கில் பேசிய HSBC வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஜோர்ஜஸ் எல்ஹெடெரி மத்திய கிழக்கிலிருந்து எண்ணெயைப் பெறும் வாங்குபவர்களுக்கான உண்மையான செலவுகள் 140 அல்லது 150 டொலர் வரை உயரக்கூடும் என்றும், சிறிலங்காவில் 286 டொலருக்கு வாங்கப்பட்டதாக கேள்விப்பட்டதாகவும் கூறினார்.

Related Articles

Latest Articles