மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் இன்று (24) காலமானார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான இவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்து மக்கள் சேவையாற்றியுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடிவிற்காகத் தனது பேனா முனையைக் கூர்மையான ஆயுதமாகக் கொண்டு, அறவழியில் போராடிய ஒரு ஜனநாயகப் போராளியாக இவர் திகழ்ந்தார்.
சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் எனப் பல்வேறு துறை சார்ந்த இலக்கியப் படைப்புகளைப் படைத்துள்ள மு. சிவலிங்கம், ‘ஒப்பாரி கோச்சி’ என்ற தனது புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடாக இன்றைய இளம் தலைமுறை வாசகர்களாலும் வெகுவாக அறியப்பட்டவர்.
தனது இறுதி மூச்சு வரை மலையக மண்ணினதும், உழைக்கும் மக்களினதும் உரிமைச் சார்ந்த விடிவுக்காகத் தன்னால் இயன்ற அனைத்துப் பணிகளையும் ஆற்றிய ஒரு ஒப்பற்ற ஆளுமையாகத் திகழ்ந்த இவரது மறைவு, மலையக சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
