“சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளரும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“மாகாண சபைத் தேர்தல் முறைமை மாற்றப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எம்மால் மீண்டும் பழைய தேர்தல் முறைமைக்குச் சென்றுவிட முடியாது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட, விருப்பு வாக்குகளுக்காக வேட்பாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும், தொகுதிக்கு எந்தவிதப் பொறுப்புக்கூறலும் இல்லாத, பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் முறையாக உறுதிசெய்யப்படாத பழைய தேர்தல் முறைமைக்கு மீண்டும் செல்ல முடியாது. ஏனெனில், மக்கள் இந்த பழைய முறையை முற்றாக நிராகரித்துள்ளனர்.
எனவே, முறையானதொரு தேர்தல் முறைமையின் கீழ் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்குரிய சட்டரீதியான வழிமுறையை நாடாளுமன்றமே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலை மட்டுமன்றி, அனைத்துத் தேர்தல்களையும் உரிய காலப்பகுதிக்குள் நடத்துவதே அரசாங்கத்தின் நிலையான எதிர்பார்ப்பாகும்” என நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.










