நச்சுப் பழங்களுக்கு முற்றுப்புள்ளி: 2027 ஏப்ரல் முதல் கடும் சட்ட நடவடிக்கை!

நச்சுப் பொருட்கள் கலந்த அல்லது இரசாயனப் பயன்பாட்டின் மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக, 2027 ஏப்ரல் 1-ஆம் திகதி முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற “குழந்தைகளுக்கு நச்சில்லா பழங்கள்” என்ற தலைப்பிலான தேசிய விழிப்புணர்வுத் திட்டத் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், அக்டோபர் 1-ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பழ விற்பனை நிலையங்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும், விழிப்புணர்வுப் பணிகளும் தொடங்கப்படவுள்ளன.

நச்சுப் பொருட்கள் இன்றிப் பழங்களைப் பழுக்கவைத்தல், தேவையற்ற இரசாயனப் பயன்பாடின்றித் தோட்டங்களிலிருந்து பழங்களை அறுவடை செய்தல் மற்றும் அவற்றை நம்பகமான முறையில் நுகர்வோரிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவை குறித்து வியாபாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நச்சில்லா பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மூலம் சிறப்புச் சான்றிதழ் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பழ விற்பனை நிலையங்களைக் கண்டறிந்து, QR குறியீடு (QR Code) மூலம் நச்சில்லா பழங்கள் விற்பனை செய்யப்படும் இடங்களைப் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் புதிய முறைமையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த முன்னெடுப்புகளுக்குப் பிறகு, 2027 ஏப்ரல் 1 முதல் நச்சுப் பொருட்கள் கலந்த பழங்களை விற்பனை செய்வோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles