“பல கட்சி ஜனநாயக முறைமைக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாம் ஓரணியில் திரள வேண்டும். இது விடயத்தில் எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிரணி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மகா சங்கத்தினருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நாம் எதிர்க்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
குற்றச்சாட்டுகளை சுமத்தி எதிரணியினரை வழக்குகளில் சிக்க வைக்க முற்படுகின்றனர். கட்சிகள் செயல்படுவதை தடுப்பதற்குரிய முயற்சியே இது.
சட்டத்தரணிகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மற்றும் ஜனநாயகத்துக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இதற்காக எதிரணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார் ரணில் விக்கிரமசிங்க.










