ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, மலையக இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.
இந்நிகழ்வு நடைபெறவுள்ள திகதி இதுவரை உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும், கண்டி அல்லது நுவரெலியாவில் இக்கலந்துரையாடல் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியின் ‘ஸ்மார்ட் யூ.என்.பி’ (Smart UNP) பிரிவினால் ‘ரணிலுடன் வாசிப்போம்’ (Read with Ranil) எனும் தேசிய விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் பல தசாப்தகால தலைமைத்துவ அனுபவம், கொள்கை வகுத்தல் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை இலங்கை இளைஞர்கள் அறிந்துகொள்ள இத்திட்டம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட வாசிப்பு, கலந்துரையாடல் மற்றும் சிந்தனைப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் நல்லாட்சி, தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக, கொழும்பில் அண்மையில் இளைஞர்களைச் சந்தித்து ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இளைஞர்களைச் சந்தித்துத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் ஊடாகப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இக்கோரிக்கைக்கு அமைவாக, மாகாண ரீதியில் இளைஞர்களை நேரடியாகச் சந்திப்பது குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய மாகாணத்திற்கு அவர் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பில் இதுவரை இறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இவ்வாறானதொரு திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதை ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய முக்கியப் பிரமுகர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.










