சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு: மாதந்தோறும் 1,000 வரை பதிவாகும் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் சிறுவர்களை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல், உள ரீதியாக துன்புறுத்துதல் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளதன்படி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு தொடர்பாக மாதமொன்றுக்கு சுமார் 600 முதல் 1,000 வரையான முறைப்பாடுகள் அதிகாரசபைக்குக் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக சிறுவர்களை கைவிடுதல், அவர்களை உரிய முறையில் பராமரிக்கத் தவறுதல் மற்றும் உடல் அல்லது உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல், பத்து ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, புறக்கணிப்பு மற்றும் கைவிடுதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கவலை வெளியிட்டுள்ள நிலையில், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles