சாமிமலை பகுதியில் கொள்ளை: இருவர் கைது!

சாமிமலை பகுதியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா காவல்துறையினர் நேற்று (24) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

21 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்:

“சாமிமலை, கவரவிலை தோட்டப் பகுதியில் கடந்த சில காலமாகத் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இது குறித்துக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான நிலையில், கடந்த 21ஆம் திகதி இப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 18 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், சமையல் எரிவாயு (Gas Cylinders) கொள்ளையிடப்பட்டுள்ளதாகக் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.”

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் இன்று (25) திங்கட்கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.

Related Articles

Latest Articles