இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான 23 வயது ருமேஷ் தரங்க, உலக தடகள சம்மேளனம் (World Athletics) வெளியிட்டுள்ள புதிய உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கை தடகள வரலாற்றில் தனிநபர் விளையாட்டொன்றில் வீரர் ஒருவர் பெற்ற மிக உயர்ந்த உலகத் தரவரிசை இதுவாகும்.
சர்வதேச தடகள அரங்கில் இந்த ஆண்டில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வரும் அவர், ரோம் டைமண்ட் லீக் (Rome Diamond League) தொடரில் 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
ரோம் நகரில் அவர் எறிந்த 92.62 மீட்டர் தூரமானது, இலங்கையின் புதிய தேசிய சாதனையாகப் பதிவாகியுள்ளது. அத்துடன் 2026ஆம் ஆண்டு தடகளப் பருவத்தில் உலக அளவில் 90 மீட்டர் எல்லையைத் தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ருமேஷின் இந்த சாதனை, உலக ஈட்டி எறிதல் வரலாற்றில் ஒன்பதாவது சிறந்த தூரமாகவும் (8th-best in history), ஆசிய தடகள வரலாற்றில் இரண்டாவது சிறந்த தூரமாகவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ (Ostrava Golden Spike) தொடரிலும் 86.57 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு மத்தியில் தனது இடத்தை அவர் மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வரும் 23 வயதான ருமேஷ் தரங்க, தற்போது உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளதால் உலக தடகள அரங்கில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னோக்கி இருக்கும் பிரதான சர்வதேச தடகளப் போட்டிகளில் இவர் கடுமையான சவாலை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுவதோடு, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருக்கும் பதக்கக் கனவை நனவாக்குவார் என்ற நம்பிக்கையையும் விளையாட்டு ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளார்.










