இன்று மலையக மக்களின் தலைமையை எடுத்து வழிநடத்தும் அனுபவமும் சக்தியும் சதாசிவத்திடம் இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் பாடசாலைகள், விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ததோடு பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், தொழிற்சங்க அரசியல் அனுபவமுள்ள சதாசிவத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவருக்கு பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அமைச்சை பெற்றுக்கொடுத்து மலையக பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வோம்.
மலையகத்தின் ஏகோபித்த தலைவராக இருந்த அமரர் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு மலையகத்திற்கு பெரும் சேவை செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவத்தை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மலையகத்திலுள்ள தோட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்துக்கொள்ளலாம்.
அமரர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலையக தலைவராக இருந்தார். இன்று அவரும் எம்முடன் இல்லை என்றார்.