பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் சிறுபான்மை தமிழ் பேசும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி தெரிவிக்கின்றார்.
பதுளை தெளிவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற வாக்காளர் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்;
ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸ அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலிலும் அவருடைய அரசியல் கட்சியே பெரு வெற்றிபெறும்.
ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் அவர்களின் தேர்தல் வெற்றி சமூகத்திற்கு எதிர்காலத்தில் நன்மை பயக்காது.
பதுளை மாவட்டத்தை பொறுத்தவரையில் முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆளுங்கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றார். பிரதமர் மகிந்தராஜபக்சவின் மலையக பகுதிக்கான அபிவிருத்தி இணைப்பாளராகவும் அவர் உள்ளார்.
கடந்த காலங்களில் தனது அமைச்சு பதவியை வைத்துக்கொண்டு பதுளை மாவட்டம் மட்டுமல்லாது முழு மலையக மக்களின் நலனிலும் அக்கறை காட்டி செயற்பட்டு வந்துள்ளார். பதுளை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகள் சுமார் 1இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்தை அண்மித்து உள்ளனர்.
இவ் வாக்குகளை பயன்படுத்தி கூடுதல் விருப்பு வாக்குகளுடன் அவரை வெற்றி பெற செய்வதன் மூலம் பதுளைக்கு கெபினட் அமைச்சு பதவி கிட்ட வாய்ப்புள்ளது.
இ.தொ.காவின் முன்னாள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு பிறகு மலையக தலைமைத்துவம் வெற்றிடமாகியுள்ளது. இத்தலைமைக்குரிய ஆளுமை பண்புகளை செந்தில் தொண்டமான் கொண்டுள்ளார்.எனவே அவரை அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்வது அவசியமாகும்.
இது போன்றே கண்டி,கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட ஆளுங்கட்சி தமிழ் வேட்பாளர்களுக்கு எம்மக்கள் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பசறை நிருபர்