ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்திருந்தார்.
அலி கமேனி பிறந்த இடமான மஷாத் (Mashhad) நகரில் அமைந்துள்ள, உலகப் புகழ்பெற்ற ‘இமாம் ரெஸா’ (Imam Reza) புனிதத் தர்காவில் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இறுதிச் சடங்கு நெருக்கமானவர்களுடன் தனிப்பட்ட முறையில் நடந்த போதிலும், இதற்கு முன்னதாக ஒரு வார காலமாக நடைபெற்ற பொது ஊர்வலங்களில் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஈரானிய அதிகாரிகளின் கணக்குப்படி இந்த எண்ணிக்கை இருமடங்காக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த இறுதிச் சடங்குகளில் அலி கமேனியின் மகனும், அவரது அடுத்த வாரிசுமான மொஜ்தாபா (Mojtaba) கலந்துகொள்ளவில்லை.
பெப்ரவரி 28 தாக்குதலுக்குப் பிறகு அவர் இதுவரை பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
